நின்மகள் விளக்குப் போன்றவள் என்றல்

416. தகளிவாய்க் கொழுஞ்சுடர் தனித்துங் கோழிருள்
நிகளவாய்ப் பிளந்தகஞ் சுடர நிற்குமே
துகளிலாச் சுடர்மணி துளும்பு பூணினாய்
மகளெலாத் திசைகளு மலிர மன்னினாள்.
 

     (இ - ள்.) துள் இலாச் சுடர்மணி துளும்பு பூணினாய் - குற்றமற்ற ஒளி பொருந்திய
மணிகள் அசைகின்ற அணிகலன்களையணிந்தவளே, தகளிவாய்க் கொழுஞ்சுடர் தனித்தும் -
அகலினிடத்திலே ஏற்றப்பெற்ற கொழுவிய விளக்கொளியானது தனித்து நின்றாலும், கோழ்
இருள் நிகளவாய்ப்பிளந்து - மிகுந்த இருளை நீளமாகப் பிளந்து, அகம் சுடர நிற்கும் -
இல்லமானது ஒளிபெற விளங்கும், அதைப்போல, மகள் எலாத் திசைகளும் மலிர
மன்னினாள் - நம்முடைய மகளானவள் எல்லாத்திக்குகளினுந் தனது சீர்த்தியானது
விளங்கும்படி நிலை பெற்று நின்றாள் (எ - று.)

நங்குலத்தில் நாமனைவரும் புகழற்றவர்களாக இருக்கவும், நம் மகள் மட்டும் பெரும்
புகழுக்கு உரியவளாக விளங்குகின்றாள் என்று; தன் மனைவிக்குத் தெரிவிக்க விரும்பிய
அரசன் இவ்வாறு கூறினான்.

( 178 )