மகளாற்குலஞ் சிறப்படைந்தது என்றல்

417. வலம்புரி வயிற்றிடைப் பிறந்த மாமணி
நலம்புரி பவித்திர மாகு நாமநீர்
பொலம்புரி மயிலனாய் பயந்த பூங்கொடி
குலம்புரிந் தவர்க்கெலாங் கோல மாகுமே.
 

      (இ - ள்.) நாமநீர் - கற்புச் சிறப்பினாலே கண்டார்க்கு அச்சத்தை யுண்டாக்குந்
தன்மை யமைந்திருத்தலுடன், பொலம்புரி மயிலனாய் - பொன்னாற் செய்யப்பட்ட மயிலைப்
போன்றவளே! வலம்புரி வயிற்றிடைப் பிறந்த மாமணி - வலம்புரிச் சங்கினிடத்திலே
தோன்றிய சிறந்த மணியானது, நலம் புரிபவித்திரமாகும் - நன்மையைச் செய்கின்ற
உயர்ந்ததாகும், அதைப்போல, பயந்த பூங்கொடி - நீ பெற்ற மகளான பூங்கொடியைப்
போன்ற சுயம்பிரபை, குலம்புரிந்தவர்க்கு எலாம் கோலமாகும் - நம்முடைய குலத்தை
விரும்பிய எல்லோருக்கும் அணியாகத் திகழ்வாள் (எ - று.)

வாயுவேகையின் மாண்பு கருதி வலம்புரி கூறினான். மணி - முத்து. பவித்திரம் - தூயது;
சிறந்ததுமாம், நாமம் - அச்சம்; நாம நீர் வலம்புரி என ஒட்டிக் கடல் எனினுமாம்.
பொலம்புரி மயில் - பொன்னாற் செய்த மயில். கோலம் - அணி.

( 179 )