(இ - ள்.) மக்களை இலாதவர் - பிள்ளைப்பேற்றினை யடையா தவர்கள், மரத்தொடு ஒப்ப என்று - மரத்திற்கு நிகராவார்கள் என்று, ஒக்க நின்று உரைப்பதோர் உரையும் மூய்த்து - உலக வழக்கத்திற்குப் பொருந்துமாறு நின்று சொல்வதாகிய ஒரு பழிச்சொல்லையும் நின்னளவில் மறைத்து; நீர் நக்கவான் இளம்பிறை - நன்னீர்மையானது விளங்குகின்ற இளம்பிறைத் திங்கள், வளர்ந்த - உண்டாகிய, நாட்கதிர்ச் செக்கர்வான் அனையதோர் திருவும் எய்தினாய் - நாள்களைச் செய்யும் கதிரவன் மறைந்த செவ்வானத்தை யொத்த அழகையும் நீ அடைந்தாய் (எ - று.) உரை - பழிச்சொல். மூய்த்து - மூடி; மறைத்து. நீர் - நீர்மை. பிறை, சுயம்பிரபைக்கும், செக்கர்வான் வாயுவேகைக்கும் உவமைகள். |