(இ - ள்.) மாவினை மருட்டிய நோக்கி - மானினை மருளச் செய்த பார்வையையுடையாய், நின் மகள் - உன்னுடைய மகளாகிய சுயம்பிரபை, நாட்பூவை ஒளித்தேவனுக்கு - அன்றலர்ந்த காயா மலர்போன்ற ஒளிபடைத்த வாசுதேவனுக்கு; பூவினுள் மடந்தை பொற்பூவை - தாமரை மலரில் எழுந்தருளிய பெண்ணாகிய அழகிய திருமகளாம்; அமிர்தமாம் - அவனுக்கு அமுதம் போன்றவளாம், தெய்வமாம் - தெய்வத்தன்மை யுடையவளுமாம்; என - என்று, ஓவில்நூல் புரோகிதன் - கெடாத நூலறிவினையுடைய சதவிந்து நிமித்திகன், உணர வோதினான் - அறியும்படியாகக் கூறினான்(எ-று.) நாள் பூவை ஒளித்தேவன் என மாறுக. பூவை - காயாமலர். ஆகுபெயர், தேவனுக்கு என்றது வாசுதேவனாகிய திவிட்டனை. திவிட்டன் திருமாலாகலின் இவள் பூவினுள் மடந்தையாகிய பொன் என்றான். அவனுக்குத் தேவியாகலின் அமிர்தம் என்றான். உலகிற்குத் தெய்வம் ஆம் என்றான். புரோகிதன் - சதவிந்து. |