(இ - ள்.) மத்தவார் மதகளிற்று உழவன் - களிப்பினையுடைய ஒழுகா நின்ற மதம் பொருந்திய ஆண் யானைகளைச் செலுத்துவதில் வல்லவனாகிய சுவலனசடியரசனானவன், இவை ஒத்தவாறு உரைத்தலும் - மேற்கூறியவைகளைப் பொருந்தும்படியாகச் சொன்ன அளவில், உவகை கைம்மிக - மகிழ்ச்சியானது மிகுதிப்பட, முத்தவாள் முகிழ் நகை அடக்கி - முத்துப்போலும் ஒளிதங்கிய பற்கள் வெளிப்படுத்திய நகைப்பை வெளியே புலப்படாமல் அடக்கிக்கொண்டு, மொய்குழல் - அடர்ந்த கூந்தலை யுடையவளும், தொத்துவார் பிணையலாள் - பூங்கொத்துக்கள் அமைந்த நீண்ட மாலையை அணிந்தவளுமாகிய வாயுவேகை, தொழுது சொல்லினாள் - அரசனை வணங்கிச் சொல்லலானாள். மற்று, அசைநிலை (எ - று.) அரசன் தன்னைப் புகழ்ந்து பேசியதைக் கேட்ட வாயுவேகை தன் பணிவுடைமையைப் புலப்படுத்திப் பேசத் தொடங்கினாள் என்க, |