சுயம்பிரபை நின்னருளினாற் சிறந்தவளாயினாள் என்றல்

421. மின்னவிர் மணிமுடி வேந்தர் வேந்தவிக்
கன்னிநின் னருளினே கருதப் பட்டனள்
மன்னவ ரருளில ராயின் மக்களும்
பின்னவர் பெறுவதோர் பெருமை யில்லையே.
 

     (இ - ள்.) மின் அவிர் மணி முடி வேந்தர் வேந்த - ஒளி விளங்குகின்ற மணிகள்
பதித்துச் செய்யப்பட்ட முடியினையுடைய மன்னர்கட்கு மன்னனாக விளங்கும் மன்னனே!
இக்கன்னி நின் அருளினே கருதப்பட்டனள் - கன்னிகையாகிய இந்தச் சுயம்பிரபையானவள்
உன்னுடைய அருளினால்தான் பெருமையுடையவளாக மதிக்கப்பட்டாள், மன்னவ அருள்
இலர் ஆயின் - அரசர்கள் அருளற்ற கொடுங்கோலர்களாக இருப்பார்களாயின், அவர்
மக்களும் பின் பெறுவது ஓர் பெருமை இல்லை - அந்த அரசர்களுடைய மக்களும் பிறகு
அடையக்கூடிய ஒருவகையான பெருமையும் இல்லை (எ - று.)

மன்னர்களுடைய பெருமையே அவர்களுடைய மக்களுக்கும் என்க.

( 183 )