இதுவும் அது

422. பிடிகளை மகிழ்களிற் 1றரசர் பெய்ம்மலர்
முடிகளின் மணிபொர முரலு மொய்கழல்
அடிகள தருளினா லம்மென் சாயலிக்
கடிகமழ் குழலினாள் கவினு மெய்தினாள்.
 

      (இ - ள்.) பிடிகளை மகிழ் களிற்று அரசர் - பெண் யானைகளை மகிழ்விக்கின்ற
ஆண் யானைகளையுடைய அரசர்கள், பெய்ம்மலர் முடிகளின் மணி பொர - பெய்யப்பட்ட
மலர்களையுடைய முடிகளின் கண் பதித்துள்ள மணிகள் பணியும்போது தாக்குதலால்,
முரலும் மொய்கழல் - ஒலிக்கின்ற வீரக்கழலையணிந்த, அடிகளது அருளினால் -
சுவாமிகளாகிய தங்களுடைய அருளால், அம்மென் சாயல் - அழகிய மென்மையையும்
சாயலையுமுடைய, இக்கடிகமழ் குழலினாள் - மணங்கமழ்கின்ற கூந்தலையுடைய இந்தச்
சுயம்பிரபை, கவினும் எய்தினாள் - அழகையும் அடைந்தாள் (எ - று.)

( 184 )