அரசன் இன்புற்றிருத்தல்

423. திருமனைக் கிழத்தி தன் றேங்கொள் சின்மொழி
மருமணி முடியினான் மகிழ்ந்து மற்றவள்
பருமணிப் பூண்முலை பாய மார்பிடை
அருமணித் தெரியறே னழிய வைகினான்.
 

     (இ - ள்.) மருமணி முடியினான் - நறுமணம் மிக்க மாலையை யணிந்த மணி
முடியினைத் தாங்கிய அரசனானவன், திருமனைக்கிழத்தி தன் தேங்கொள் சின்மொழி
மகிழ்ந்து - அழகிய தன்னுடைய இல்லத்துக்குரிமை பூண்டவளாகிய வாயுவேகையின்
இனிமையைக் கொண்ட சிலவாகிய மொழிகளுக்கு மகிழ்ச்சியடைந்து, அவள் பருமணிப்பூண்
முலைமார்பிடைபாய - அவளுடைய பருத்த மணிகளாலாகிய அணிகலன்களைத் தாங்கிய
கொங்கைகள் தன்னுடைய மார்பிடத்திலே பாயவும், அருமணித் தெரியல் தேன் அழிய -
அருமையான அழகிய மாலையினின்றும் தேன் வெளிப்படவும், வைகினான் -
இன்பத்துட்டங்கினான், மற்று : அசைநிலை, (எ - று.)

தேன் அழிய என்பதற்கு, வண்டுகள் இரிந்தோட என்றும் பொருள் கூறலாம்.

( 185 )