(இ - ள்.) கொற்றவாள் தடக்கையான் - வெற்றி பொருந்திய வாட்படையைப் பெரிய கையிலே ஏந்திய சுவலனசடியரசன், மற்றை நாள் - அடுத்த நாளில், மகனையும் அமைச்சர் தம்மையுங் கூவிக்கொண்டு இருந்து - மகனாகிய அருக்ககீர்த்தியையும் அமைச்சர்களையும் அழைத்து அவை கூட்டியமர்ந்து, யான் கருதியது இற்று என்று - நான் எண்ணியது இந்நிலை யிலேயுள்ளது என்று, தொல்லைநூல் கற்ற நாவலனது கதையுஞ் சொல்லினான் - பழைய நிமித்தநூல் கற்ற நாவலனாகிய சதவிந்து தனக்குக் கூறிய வரலாற்றையும் கூறினான், (எ - று.) மேல் நிகழ வேண்டியவைகளைச் செய்தற்கு அரசன் அவையைக் கூட்டினான் என்க. மகள் - அருக்ககீர்த்தி. இற்று - இத்தன்மைத்து. தொல்லை நூல் கற்ற நாவலன் - சதவிந்து, கதை - அவன் கூறிய புராண கதை. கற்ற நாவலன் என்றும் பாடம். |