பயாபதி யரசனிடம் தூது அனுப்புவோம் என்றல்

426. தெய்வமே 3திரிகுழற் சிறுமி யாவதற்
கையமே யொழித்தன மனலும் வேலினாய்
4செய்யதோர் தூதினித் திவிட்டன் றாதையாம்
வெய்யவே லவனுழை விடுத்தும் வேந்தனே.
 

     (இ - ள்.) அனலும் வேலினாய் - ஒளி வீசுகின்ற வேற்படையை உடையவனே!,
திரிகுழல் சிறுமி தெய்வமே ஆவதற்கு - முறுக்குண்ட கூந்தலையுடைய
சுயம்பிரபையானவள் தெய்வமே ஆகி விளங்குதற்கு, ஐயமே ஒழிந்தனம் - ஐயப்பாடு
சிறிதும் இல்லாமல் நாங்கள் உணர்ந்து கொண்டோம், இனி - இனிமேல், திவிட்டன்
தாதையாம் வெய்ய வேலவன் உழை - திவிட்டனுடைய தந்தையாகவும் கொடிய
வேற்படையை உடையவனாகவும் விளங்கும் பயாபதி மன்னன் இடத்திற்கு, வேந்தனே -
அரசனே, ஓர் தூது விடுத்தும் - ஒரு தூதுவனை யனுப்புவோம் (எ - று.)

மேலே நடக்கவேண்டிய செயல்கட்குத் தூது அனுப்ப வேண்டியது இன்றியமையாத
தாகலின், தூதுவனைப் பயாபதி மன்னன்பால் அனுப்புவோம் என்கின்றனர்.

( 188 )