மரீசியைத் தூது அனுப்புதல்

428. காரியந் 3துணிந்தவர் மொழியக் காவலன்
மாரியந் தடக்கையான் வருக வென்றொரு
சீரிய திருமுகஞ் சிறப்பொ டீந்தனன்
ஆரியன் கழலடி யவனும் வாழ்த்தினான்.
 

     (இ - ள்.) காரியம் துணிந்தவர் மொழிய - செயலினை மேற்கொண்டு இவ்வாறு
செய்வோ மென்று உறுதி செய்தவராகிய அமைச்சர் மேற்கூறிய வாறு சொல்லவும், காவலன்
- அரசன், மாரி அம் தடக்கையான் வருக என்று - முகில்போல் இரவலர்க்குக் கைம்மாறு கருதாது நன்கொடையினைப் பொழியும் பெரிய கைகளையுடையவனாகிய மருசி
என்பவனையழைத்து, ஒரு சீரிய திருமுகம் சிறப்பொடு ஈந்தனன் - ஒரு சிறந்த
முடங்கலைக் கொடுக்கப் பெறவேண்டிய சிறப்புக்களோடு கொடுத்தான், அவனும் -
திருமுகத்தைப் பெற்றவனாகிய மருசியும் ஆரியன் கழலடி வாழ்த்தினான் - அரசனுடைய வீரக்கழல்களை யணிந்த அடிகளை நன்மொழி கூறிப்போற்றினான், (எ - று.)

காவலன் - சடிமன்னன். கையானை வருக என்று அழைத்து என்க. சிறப்பு-தூதர்க்குச்
செய்யும் சிறப்புக்கள். ஆரியன்-ஈண்டுச் சடிமன்னன்.

( 190 )