மாடத்திற் பலவகை ஒலிகள் | 43. | மாடவாய் மணிமுழா விசையு மங்கையர் ஆடுவார் சிலம்பிணை யதிரு மோசையும் பாடுவார் பாணியும் பயின்று பல்கலம் மூடி 1மா ணகரது முரல்வ தொக்குமே. | (இ - ள்.) மாடவாய் மணிமுழா இசையும் - மாளிகைகளிலே அழகிய மத்தளங்களின் ஒலியும்; ஆடுவார் மங்கையர் சிலம்பு இணை அதிரும் ஓசையும் கூத்தாடுகின்ற இளமகளிரது இணைச் சிலம்புகள் ஒலிக்கின்ற ஒலியும்; பாடுவார் பாணியும் - பாடுகின்றவர்களது இசைப்பாட்டொலியும்; பயின்று - எல்லாவிடங்களினும் நிறைந்து; மாண் நகர் அது - பெருமை பொருந்திய அந்தப் போதனமாநகரமாகிய பாண்மகள்; பல்கலம் மூடி முரல்வது ஒக்கும் - மாடங்களாகிய பலவகை அணிகலன்களையும் தன்மேல் அணிந்துகொண்டு பாடுவதை ஒக்கும். ( எ - று.) இஃது அந்நகரத்துப் பலவகை ஒலியையுங் கூறுகிறது. முழவொலி, ஆடல் புரிவாரது கால் ஒலி பாட்டொலி ஆகிய ஒலிகள் சேர்ந்து ஒலித்தல், அந்தப் போதனமா நகரம் ஆகிய பாண்மகள் மாடங்களாகிய பலவகை அணிகலன்களைத் தன்மீது அணிந்துகொண்டு ஒலிப்பதைப்போன்று விளங்கு கின்றதென்க. அணிகலன்-மாடங்கட்குவமை. நகர்க்குப் பாண்மகள் உவமை என்க. இச்செய்யுள் உவமையணி. மூன்றாம் அடி முற்று மோனை. | ( 8 ) | | |
|
|