பொழிலிலுள்ள மரங்கள், மகிழ், தேமா, சுரபுன்னை
புன்கு முதலியன

431. மருவினியன மதுவிரிவன மலரணிவன வகுளம்
திருமருவிய செழுநிழலன செங்குழையன தேமா
வரிமருவிய மதுகரமுண மணம் விரிவன நாகம்
பொரிவிரிவன புதுமலரன புன்குதிர்வன புறனே.
 

     (இ - ள்.) வகுளம் - மகிழ மரங்கள், மரு இனியன - நறு மணத்தால்
இனிமையையுடையன, மதுவிரிவன - தேன்பெருகப் பெறுவன, மலர் அணிவன - மலர்களை
அழகாகப் பொருந்தப் பெற்றுள்ளன; தேமா - தேமா மரங்கள், திருமருவிய - அழகு
பொருந்திய, செழுநிழலன - நல்ல நிழலையுடையன; செங்குழையன - செந்நிறமான
தளிர்களையுடையன; நாகம் - சுரபுன்னை மரங்கள், வரிமருவிய - கோடுகள் பொருந்திய;
மதுகரம்உண- வண்டுகள் உண்ணுமாறு, மணம் விரிவன - மணம் பொருந்திய தேன் பெருகப் பெறுவன; புன்கு - புன்க மரங்கள்; பொரிவிரிவன - நெற்பொரியைப் போல
மலர்வன; புதுமலரன - அன்றலர்ந்த மலர்களைக் கொண்டன; புறன் உதிர்வன - வெளியெங்கும் அம்மலர்கள் உதிரப் பெறுவன, (எ - று.)

புன்கினினுடைய பூ பொரிப்பொரித்தாற்போல மலரும். அப்பொழிலின் கண், வகுளம் நாகம்
புன்கு என்கிற மலர்மரங்களும் நிழலைத்தரும் தளிர்பொருந்திய தேமா மரங்களும் உள்ளன
என்க. “மருவினியன, மதுவிரிவன“ என்ற இரண்டும் மலருக்கு அடைமொழி. தேமா என்பது
மாமரத்தில் ஒருவகை. புன்கம் பூ நெல்லின் பொரியைப் போன்றிருக்கும் என்பதை
“பொரிப்பூம் புன்கு“ “புன்கம் பொரியணிந்தனவே“ “புன்கு பொரி மலர“ என்பவற்றாலும்
உணர்க. இச்செய்யுளில் குற்றெழுத்துக்களே மிகுதியாகப் பயின்றன; இதனைக் குறுஞ்சீர்
வண்ணம் என்பர்.

( 1 )