(இ - ள்.) சாந்தம் - சந்தனமரங்கள்; நிழல் நகுவன - நிழலினால் விளங்குவன; நிமிர்தழையன - மிகுந்த தழைகளையுடையன; நிறைகுளிர்வன - மிகுந்த குளிரைச் செய்வன; எழுசண்பக நிகரம் - அங்குத் தோன்றியுள்ள சண்பகமரக் கூட்டங்கள்; எழில் நகுவன - அழகு விளங்குவன; இளமலரன - அன்றலர்ந்த இளம்பூக்களையுடையன; பலகுரவம் - பல குராமரங்கள்; குழல் நகுவன - வேய்ங்குழல் ஒலியைப்போல் விளங்கும் இன்னொலியைச் செய்யும்; மதுகரநிரை குடைவன - வண்டுகளின் கூட்டங்களால் குடையப் பெறுவன; அலர் நெரிதர - மலர்கள் நெருங்கி நிற்க, அசைநிலைய அசோகம் - அசைகின்ற நிலைமையையுடைய அசோகமரங்கள்; அழல்நகுவன - தமது செந்நிற வொளியால் தீயைப்பார்த்து எள்ளி நகையாடுகின்றாற் போன்ற தோற்றத்தையுடையன (எ - று.) அப்பொழிலிற் சந்தன மரங்கள் தழைமிகுந்து நிழலையுண்டாக்கி மிகுந்த தண்மையை உண்டாக்க, சண்கபகமரக் கூட்டங்கள் மலர்கள் மிகுதியாகப் பூத்து அழகுமிகுந்து விளங்கும் குராமரங்களின் மலர்களை இன்னிசையை உடைய வண்டுகள் குடைந்து உண்ணா நிற்கும். அசோக மரங்களின் செந்நிறப் பூக்கள் தீப்போற்செறிந்து காற்றினால் அசையும். வண்டுகள் செய்யும் ரீங்கார ஒலி வேய்ங்குழல் ஒலியையும் தோற்கச் செய்யும். |