இரதம் இருப்பை தாழை புன்னை ஆகிய மரங்கள்

433. எழுதுருவின வெழுதளிரன விணரணிவன விரதம்
இழுதுருவின கொழுமலரிடை யெழில்பொலிவன மதுகம்
கழுதுருவின கஞலிலையன கழிமடலின கைதை
பொழுதுருவின வணிபொழிலின பொழி 1தளிரன புன்னை.
 

     (இ - ள்.) இரதம் - இரதம் என்னும் மரங்கள்; எழுது உருவின - ஓவியத்தில்
எழுதப்பட்டாற் போன்ற அழகிய உருவத்தையுடையன; எழுதளிரன - புதிதாக
எழும்புந்தளிர்களையுடையன; இணர் அணிவன - பூங்கொத்துக்களை அணிந்து
விளங்குவன; மதுகம் - இருப்பை மரங்கள்; இழுது உருவின - தோய்ந்த நெய்யின்
வடிவத்தையுடைய; கொழுமலர் இடை - செழிப்பான மலர்களைத் தம்மிடத்தே கொண்டு;
எழில் பொலிவன - அழகு விளங்குவன; கைதை - தாழைகள்; கழுது உருவின -
பேய்களின் தோற்றத்தையுடையன, கஞல் இலையன - நெருங்கிய இலைகளைக் கொண்டன;
கழிமடலின - மிகுந்த மடல்களைக் கொண்டன; புன்னை - புன்னை மரங்கள்; பொழுது
உருவின - கதிரவனை ஊடுருவுமாறு வளர்ந்துள்ளன; அணி பொழிலின - அழகிய
பூங்காவிடத்தே யுள்ளன; பொழி தளிரன - மிகுந்த தளிர்களையுடையன, (எ - று.)

இச் செய்யுளால் இரதம் மதுகம் கைதை புன்னை என்ற மரங்கள் அப்பொழிலில்
அமைந்திருக்கும் தன்மையைக் கூறுகிறார். இரதம் என்பது தமிழில் தினிசமரம் எனக்
கூறப்பெறும் என்பர். இரதம் இனிய மாமரம் என்று உரைத்தாரும் உளர். தாழை
தலைவிரிந்து நிற்கின்றநிலை பேய்போற் காணப்பெறும் என்க. பொழுது என்பது
 கதிரவனைக் குறித்தலை “பொழுதுபோய்ப்பட்ட பின்றை“ என்ற சிந்தாமணியாலும் உணர்க.

( 3 )