பொழிலில்வாழும் வண்டு புள்
முதலியவைகளின் சிறப்பு

436. மதுமகிழ்வன மலர்குடைவன மணிவண்டொடு தும்பி
குதிமதிழ்வன 1குவிகுடையன நுதிகோதுபு குயில்கள்
புதுமகிழ்வன பொழிலிடையன புணர்துணையன பூவை
விதிமகிழ்பவர் மதிமகிழ்வுற விரவுற்றன விரிவே.
 

     (இ - ள்.) மணிவண்டொடுதும்பி - அழகிய வண்டுகளுடனே தும்பிகள்; மதுமகிழ்வன
- தேனையுண்ண மகிழ்ச்சி கொண்டனவாகி; மலர்குடைவன - பூக்களைக் கிண்டுவன;
குயில்கள் - குயில்கள் என்னும் பறவைகள்; நுதிகோதுபு - மலர்தளிர் முதலியவற்றின்
நுனிகளை வாயலகினாலே கோதி; குதிமகிழ்வன - குதித்து மகிழ்வன பிறகு, குவிகுடையன
- அடங்கியமைந்து அவைகளைக் குடைவன; பூவை - நாகணவாய்ப் பறவையின் ஆண்கள்;
புணர்துணையன - தம்முடைய பெட்டைகளோடு சேர்ந்தனவாய்; புதுமகிழ்வன - புதுமணக்
களிப்பை யடைவன; பொழில் இடையன - அப்பொழிலினிடையே தங்குவன; இவ்வாறான;
விரிவு - அச்சோலையின் பரப்பு, விதி மகிழ்பவர் - நல்வினையாலே மகிழ்ச்சி பெற்றவரின்; மதி மகிழ்வுற - மனங்களிப்பையடைய; விரவுற்றன - பொருந்தியுள்ளன. (எ - று.)

வண்டு முதலிய பறவைகள் இனிதாகத் தங்கப்பெற்ற அந்தப் பொழில் நல்வினையோர்
அமர்ந்து மகிழ்ச்சியடையுமாறு அமைந்துள்ள தென்பதாம். வண்டு தும்பி அறுகாற்
பறவையின் வகைமாறுபாடுகள் “தும்பி வண்டொடு தூவழி யாழ்செய“ என்னுஞ்
சிந்தாமணியுங் காண்க. மணிவண்டு - நீலமணிபோன்ற வண்டு என்று உரைப்பினும்
பொருந்தும். குதிமகிழ்தல் - துள்ளிவிளையாடுதல்.

( 6 )