(இ - ள்.) பொய்கைக் கரை அவ்விடம் - தடாகத்தின் கரையான அந்த இடம், புணர்கொண்டுஎழு - நெருங்குதலைக் கொண்டு மேலெழுகின்றனவும்; பொரு - ஒன்றோடொன்று மோதுவனவுமான; திவலைகள் சிதறா - நீர்த்துளிகளைச் சிதறிக் கொண்டும்; கரை - அவ்விடத்திலே; துணர்கொண்டன - கொத்தாயிருக்குந் தன்மையைக் கொண்டனவாய்; மாதுறு மலர் பலநனி தூவா - சிறந்த நெருங்கிய மலர்கள் பலவற்றை நன்றாகச் சிதறிக்கொண்டும்; வணர்கொண்டன - வளைதலைக் கொண்டனவாகி; மலல்உற்று - செழிப்புப் பொருந்தி; அலை - அலைகின்றனவாய், வளர்வண்டினம் எழுவா - மேன்மேன் மிகுகின்ற வண்டுக் கூட்டங்களை எழுப்பிக்கொண்டும்; இணர் கொண்டு - நறுமணத் தொகுதியைத் தன்னிடத்தே கொண்டு; எதிர்எழு - எதிர்நோக்கி வருகின்ற; தென்றலின் - தென்றற் காற்றினாலே; எதிர்கொண்டது - விஞ்சைத் தூதுவனாகிய மரீசியை எதிர்கொண்டழைத்தது. (எ - று.) பெரியோர்களை வரவேற்பவர்கள் பனிநீர் தெளித்தும் மலர்களைத் தூவியும் வழிபாடுசெய்து எதிர்கொள்ளுதல் முறைமை. பொய்கைக் கரையின் இடத்திற்கு வந்த விஞ்சைத் தூதன்மீது பொய்கையின் நீர்த் திவலைகளைச் சிதறியும் தான் அடித்துக்கொண்டு வரும் பல மலர்களைச் சிதறியும் மலர்மணம்கொண்ட தென்றல் அவன்மீது வீசியதனால் அப்பொழில் தென்றலாகிய பணியாளனைக்கொண்டு விஞ்சையர் தூதனை எதிர்கொள்வது போன்றிருந்த தென்றார். உருபு வெளிப்படாத தன்மைத் தற்குறிப்பேற்றவணி. |