(இ - ள்.) ஏழைவாய்ச் சுரும்பினம் - நல்கூர்ந்த வாயினையுடைய வண்டுக்கூட்டங்கள்; தாழிவாய்க் குவளையும் - மாடங்களில் தாழியில் வைத்துவளர்த்த குவளை மலரும்; தண் என் ஓதியர் - குளிர்ந்த கூந்தலையுடைய பெண்களின்; மாழைவாள் நெடுங்கணும் - மாவடுவையும் வாளையும்போன்ற நீண்ட கண் களும் ஆகிய இவற்றிடையே வேற்றுமை யுணரமாட்டாது; மயங்கி - பேதுற்று; வந்துசென்று - கண்களிடத்திற்கும் மலர்களிடத்திற்குமாக அலைந்து; யாழ் அவாம் இன்குரல் ஆலித்து-யாழும் விரும்புதற்குக் காரணமான இனிய குரலாலே முரன்று; ஆர்த்து -ஆரவாரஞ்செய்து; இளைக்கும்-மெலிவடையும்; என்ப-ஏ ஈற்றசைகள். (எ-று.) தாழிவாய்க்குவளை-தாழியில் இட்டு வளர்த்த குவளை மலர். இங்ஙனம் வளர்த்து மாடங்களில் வைத்தல் பண்டைக் காலத்து வழக்கம். இதனைத் “தாழியுள் மலர்ந்த தண் செங்குவளை“ எனவரும் பெருங்கதை (3 - 5 - 87) யானும் உணர்க. வண்டுகள் கருங்குவளை மலர்களிடத்திற்குச் செல்லுகின்றன. அம்மலர்கள் மங்கையர் கண்களைப் போன்றே விளங்குதலைக் கண்டு, கண்கள் என்றே முடிவு செய்து அவற்றில் மொய்க்காமல் மீண்டு வந்து விடுகின்றன. அவை மகளிர் கண்களிடத்திற்குச் சென்று அவைகளைக் குவளை மலர்கள் என்று முடிவு செய்து மொய்க்கத் தொடங்குகின்றன. அம்மகளிர்கள் ஓட்டுதலால் மொய்க்கமுடியாது திரும்புகின்றன. இவ்வாறு பல்கால் சென்றும் மீண்டும் வண்டுக் கூட்டங்கள் மயங்கி அலறி வருந்தித் திரிகின்றன. இச்செய்யுளால் அந்நாட்டு நீர்வளத்தையும் மாதர் அழகு நலத்தையும் குறிப்பிட்டார். என்ப-என்று கூறுவார்கள் என்றும் பொருள் உரைக்கலாம். தாழி-வாயகன்ற மண்தொட்டி. ஓதிக்குத்தன்மை-கண்ணுக்கினிமை பயத்தல். மாழை-மாமரம், ஈண்டு இளங்காயைக் குறிப்பித்தலின் முதலாகு பெயர். மாம்பிஞ்சின் உட்பிளவு கண்ணுக்கு வடிவத்தால் உவமை. இங்ஙனம் மயங்கித் தேனுண்ணாமை தோன்ற ஏழைவாய்ச் சுரும்பினம் என்றார். |