(இ - ள்.) அதனின் நிழல் - அந்த அசோக மரத்தின் நிழலை; அவன் அடைதலும் - மரீசி என்னும் விஞ்சையர் தூதுவன் சேர்தலும்; அது காவலன் ஆவான் - அந்த புட்பமாகரண்டப் பொழிலுக்குக் காவலாளாக அமைந்த துருமகாந்தன் என்பவன்; பொதியின் அவிழ்மலர் சிதறுபு - கட்டவிழ்ந்த மலர்களைத் தூவி: பொலிக என்று உரைபுகலா - 'நீ சிறப்புடன் விளங்குவாயாக' என்னும் வாழ்த்துரையைக் கூறி; மதியின் ஒளி - திங்களினுடைய வெண்ணிறவொளி; வளர்கின்றது - மிகுதியாகத் தோன்றுவதாகிய; ஓர் மணியின் சிலைகாட்ட - ஒப்பற்ற சந்திரகாந்தக்கல் வட்டத்தைக் காட்ட; இது என் என இது என்என - 'இது என்ன! இது என்ன!!' என்று, வினையன் பலசொன்னான் - தூது வினையின்மேல் வந்த மருசி பலமுறை சொன்னான். (எ - று.) விஞ்சையர் தூதனாகிய மருசி அசோகமரத்தின் நிழலை அடைந்தான். பொழிற்காவலனா யமர்ந்திருந்த துருமகாந்தன் மருசிக்குத் திங்கள் ஒளிக்கல்லைக் காட்டினான். அதனைக்கண்ட மருசி மிகுந்த வியப்படைந்தான். காவலன் என்னுஞ் சொல்லை, காவலன் - காத்தலில் வல்லவன் என்றும், காவல் அன் காத்தல் தொழிலை உடையவன் என்றும் பிரிக்கலாம். அதனின்னிழல், பொதியின்னவிழ், மதியின்னொளி என்பன விரித்தல். |