(இ - ள்.) மினல்கொடி விலங்கிய - மின்னற்கொடிகள் குறுக்கிட்டுப் பாய்தற்கு இடமான; விலங்கல்மிசை வாழும் - மலையின்மேலே வாழுகின்ற; புனல்கொடி மலர்த்தொகை - புனலிக்கொடியின் மலர்கள்; புதைத்த பொலிதாரோய் - மிகுதியாகக்கொண்டு கட்டப்பெற்று விளங்கும் மாலையையுடையவனே; நினக்கு என இயற்றிய - உனக்கென்றே அமைக்கப்பெற்ற; நிலாநிழல் மணிக்கல் - திங்களொளியை அழகாகக்கொண்ட இந்தக் கல்லின்மீது; மனக்கு - மனதிற்கு; இனிதின் ஏறினை - இனிமையுண்டாகும்படியாக ஏறி; மகிழ்ந்து இருமின் என்றான் - மகிழ்ந்து இருப்பாயாக என்று கூறினான். (எ - று.) விஞ்சையர்கள் மலைமீது வாழ்பவராகலானும் மலைமேல் முகில்கள் தங்குவதனால் அங்கு மின்னற்கொடி குறுக்கிட்டுப் பாயுமாகலின், மருசிக்கு 'மினற்கொடி விலங்கிய விலங்கன் மிசைவாழும்' என்னும் சிறப்புக் கொடுக்கப்பட்டது. நிலாநிழற் கல் விஞ்சையன் தங்குவதற்காகவே பயாபதி மன்னனால் அமைக்கப்பெற்றது. மனக்கு, அத்துச் சாரியை தொக்கது. இருமின் - ஒருமை பன்மை மயக்கம். |