(இ - ள்.) அழல்கதிர் இயங்குஅற - தீயையொத்த ஒளியையுடைய கதிரவன் இயங்குதல் ஒழியும்படி; அலங்கு இணர் அசோகம் - அசைகின்ற பூங்கொத்துக்களையுடைய இந்த அசோகத்தை; நிழல்கதிர் மரத்தகையது ஆக - நிழலைத் தருகின்ற ஒளியையுடைய மரத்தன்மையைக் கொண்டதாக; நினைகிலேன் - நான் நினைக்கவில்லை; இது பொழிற்கடவுள் பொன்இடம் - இஃது இப்பொழிலுக்குரிய கடவுளின் அழகிய இடமாகும். புகுமாறு என்னை என்று - இதில் நான் ஏறி அமர்வது எவ்வாறு என்று; எழில்கதிர் விசும்புஇடை இழிந்தவன் - அழகிய ஒளியுள்ள விண்ணினின்றும் இறங்கியவன்; மொழிந்தான் - சொன்னான். (எ - று.) அசோகமரம் கதிரவன் மண்டிலம்வரை ஓங்கி வளர்ந்து நிற்றலால் கதிரவன் இயங்குதற்குத் தடையாயிற்று. மிகவும் பெருமை பொருந்திய வனதேவதை தங்குதற்கு ஏற்ற இந்தச் சிலாவட்டத்தில் விஞ்சையர் தூதுவனான நான் தங்குதல் ஏற்குமோ ஏற்காது என்று பொழிற்காவலனாகிய துருமகாந்தனுக்கு மருசி விடை கூறினன் என்க. கடவுள் - அருகனுமாம். |