(இ - ள்.) இது வந்தவகை என்ன என்னின் - இந்த நிலா நிழற்கல் தோன்றியவிதம் எவ்வாறு என்று கேட்பின்; இது கேண்மின் - நான் உரைக்கும் இந்த மொழிகளைக் கேட்பீராக; நல்நகர் இதற்கு இறைவன் முன்னம் - அழகிய நகரமாகிய இந்தப் போதனமாபுரத்திற்கு அரசனாகிய பயாபதியினுடைய முன்னிலையிலே, தன்நிகர் இகந்தவன் - தனக்கு ஒப்பானவர்களை நீங்கியவனும், அங்கதன் எனும் பேர் - அங்கதன் என்னும் பெயரைக் கொண்டவனுமாகிய, பொன் அவிரும் நூல்கெழு - பொன்போல் விளங்குகின்ற அரிய நூலறிவு மிக்குள்ள; புரோகிதன் நனிநண்ணி உரைத்தான் - புரோகிதனானவன் மிக நெருங்கிக் கூறினான். (எ - று.) பொன்அவிரும் நூல்கெழு; பொன்போல் விளங்குகின்ற பூணூல் பொருந்திய எனினுமாம். அங்கதன் உரைத்தசெய்தி மேலே கூறப்படும் |