(இ - ள்.) அந்தப் புரோகிதனானவன் பயாபதி மன்னனைப் பார்த்து) மன்ன - அரசனே!, மின்அவிர் விளங்கு சுடர் - மின்னலைப்போல் இமைத்தலைச் செய்கின்ற விளக்கம் பொருந்திய ஒளியானது அமைந்த, விஞ்சை உலகு ஆளும் - வித்தியாதர உலகத்தை அரசாட்சி புரிகின்றவனும், வில்நவில் தடக்கை விறல் வேல் ஒருவன் - விற்போரிற் பழகிய பெரிய கையின் கண்ணே வெற்றிபொருந்திய வேற்படையைத் தாங்கியவனுமாகிய ஒருத்தன், வேண்டி - விரும்பி, நின்மகற்கு ஒரு மகள் கருமம் உன்னி - நின்னுடைய மகனுக்கு ஒப்பற்ற தன்னுடைய மகளைத் திருமணஞ்செய்து கொடுத்தலாகிய செய்கையை நினைத்து, இன்னவன் இனைப்பகலுள் - இவ்வாறான தன்மையை உடையவன் இத்தனை நாட்களுள், ஈண்டு இழியும் என்றான் - இப்பொழிலிலே வந்து இறங்குவான் என்று கூறினான், (எ - று.) வித்தியாதர உலகத்து அரசனிடமிருந்து தூதன் ஒருவன் வருவான் என்று அங்கத நிமித்திகன் கூறிய செய்தியைத் துருமகாந்தன் இச்செய்யுளால் மருசிக்குக் கூறுகிறான். வேலொருவன் என்று குறிப்பித்தல் சுவலனசடியரசனை. மின்னவிர் விளங்குசுடர் ஒரு பொருட் பன்மொழியாக அமைந்து நின்றன. |