(இ - ள்.) மடங்கலை அடும்திறல் - அரிமாவைக்கொல்ல வல்ல ஆண்மையும், நெடுந்தகைதன் மாறாய் - மிகுந்த பெருமைக் குணமுமுடைய திவிட்டனுக்கு எதிராக, அடங்கலர் அடங்க அடும் ஆழி அஃது - பகைவர்களையெல்லாம் ஒருங்கு சேரக் கொல்லும் உருளைப்படையை, ஆள்வான் அவன் - கைக்கொண்டிருப்பவனாகிய அச்சுவகண்டன், உடங்கு - ஒரு சேர, உடன்று - சினந்து, எரிதுளும்பவரும் - தீப்பொறிபறக்க எதிர்த்து வருவான், வந்தால் - அவ்வாறு எதிர்த்து வந்தால், நடந்தவன் நடுங்க - போர்செய்யுமாறு எதிர்த்துவந்தவனாகிய அச்சுவகண்டன் நடுக்கத்தையடையுமாறு, நம்பி இவன் - மேன்மைக்குணமுடையவனாகிய இத் திவிட்டன், அடும்என்றான் - கொல்வான் என்றும் அந்த அங்கதன் என்னும் புரோகிதின் அரசனிடம் கூறினான், (எ - று.) அச்சுவக்கிரீவனை அடுவான் என்னும் இச்செய்தியை அங்கத நிமித்திகன் பயாபதி மன்னனிடம் கூறவில்லை. |