பயாபதி மன்னன் விடுத்த பாவையர்
புட்பமாகரண்டப் பூங்காவை நோக்கிப்புறப்படுதல்

449. பொன்னவிர் மணிக்கலை சிலம்பொடு புலம்ப
மின்னவிர் மணிக்குழை மிளிர்ந்தொளி துளும்பச்
சின்னமலர் துன்னுகுழ றேறலொடு சோர
அன்னமென வல்லவென வன்னண நடந்தார்.
 

     (இ - ள்.) பொன்அவிர் மணிக்கலை - பொன் விளங்குகின்ற மணிகளிழைத்துள்ள
மேகலை, சிலம்பொடு புலம்ப - அடிகளில் அணிந்துள்ள சிலம்பென்னும் அணியுடனே
ஒலிக்கவும், மின்அவிர் மணிக்குழை - ஒளி விளங்குகின்ற மணிகள் பதிக்கப்பெற்ற
குழையென்னுங் காதணி, மிளிர்ந்து ஒளி துளும்ப - விட்டுவிட்டு ஒளி ததும்பவும்,
சின்னமலர் - கிள்ளியிடப் பெற்ற மலர்கள், துன்னுகுழல் தேறல்ஒடு சேர - நெருங்கிய
கூந்தல்மலர்களினின்று பெருகுகின்ற தேனுடனே தாழ்ந்து விழவும், அன்னம்என -
இம்மங்கையர்களைக் கண்டவர்களிற் சிலர் அன்னப்பறவை இவர்கட்கு ஒப்பு என்று
சொல்லவும், வேறுசிலர், அல்லஎன - அன்னப்பறவைகள் இவர்கட்கு ஒப்பு அல்லவென்று
சொல்லவும், அன்னணம் நடந்தார் - அவ்வாறு நடந்து சென்றார்கள், (எ - று.)

அரசனேவிய பணிப்பெண்கள் பொழிலைநோக்கி நடந்து சொல்லும் போது, உடல்
அசைவதால் அவர்களுடைய மேகலையும் சிலம்பும் ஒலி செய்தன. அவருடைய
மணிக்குழைகள் விட்டுவிட்டு ஒளிதுளும்பின. சூடிய மலர்களினின்றும் பெருகுகின்ற
தேனோடு கூந்தல் சோர்வதாயிற்று. அவர்கள் நடப்பதைக்கண்டு சிலர், 'அன்னந்தான்
நடந்து செல்லுகின்றன' என்று மயங்கிக்கூறத், தெளிந்த அறிவினை யுடையவர்கள் அவர்கள்
சொல்லை மறுத்து 'அன்னம் செல்லவில்லை மகளிரே செல்லுகின்றனர்' என்றுகூற மகளிர்
நடந்து சென்றார்கள் என்க. சின்னமலர் கிள்ளியிடப்பெற்ற மலரையன்றி விடுதிப் பூவையுங்
காட்டும்.

( 19 )