கடைத்தெரு

45. பளிங்குபோழ்ந் தியற்றிய பலகை வேதிகை
விளிம்புதோய் 1நெடுங்கடை வீதி வாயெலாம்
துளங்குபூ மாலையுஞ் சுரும்புந் 2தோன்றலால்
வளங்கொள்பூங் கற்பக வனமும் போலுமே.
 
     (இ - ள்.) பளிங்கு போழ்ந்து - படிகக்கற்களை நிரல்பட அறுத்து; இயற்றிய பலகை
வேதிகை - இயற்றப்பட்ட பலகைகளாற் செய்த மேடைகள்; விளிம்புதோய் - ஓரத்திலே
பொருந்தப்பெற்ற; நெடுங்கடை வீதி வாய்எலாம் - பெரிய கடைகளின் தெருக்களிலெல்லாம்;
துளங்கு பூமாலையும் - அசைகின்ற பூமாலைகளும்; சுரும்பும் தோன்றலால் - அவற்றில்மொய்க்கின்ற வண்டுகளும் காணப்படுவதால் அக்கடைத் தெருக்கள்; வளம் கொள்பூம்
கற்பக வனமும்போலும் - எல்லாச் செல்வங்களையும் தன்னிடத்தேகொண்ட அழகிய
கற்பகச் சோலையையும் ஒத்திருக்கும். (எ- று.)

     போதனமா நகரத்துக் கடைவீதி அழகிய கற்பகச்சோலையைப் போன்ற தென்க.
கற்பகமரங்கள் மாலையாகப் பூக்கும் என்பர். கற்பகச்சோலையைச் சேர்ந்தவர்கள் வேண்டிய
பொருளை வேண்டியவாறு பெறுவதுபோல இக்கடைத் தெருவை யடைந்தவர்களும்
வேண்டியவைகளை வேண்டியவாறு அடைவர் என்க. தேவர்கள் அணிந்துள்ள போது
அவர்களுடைய மாலையில் வண்டுமொய்த்தல் இராதேயன்றி அவர்கள் அணியாதபோது
வண்டு மொய்த்தல் உண்டுபோலும்.

 (10)