450. நலங்கனி மடந்தையர் நடத்தொறு மிணர்ப்போ
தலங்கலள கக்கொடி யயற்சுடர வோடி
விலங்குபுரு வக்கொடி முரிந்துவெரு வெய்த
மலங்கின விலங்கின மதர்த்தவவர் வாட்கண்.
 

     (இ - ள்.) நலம்கனி மடந்தையர் - அழகுமிகுந்த அந்தப் பெண்கள், நடத்தொறும் -
நடக்குந்தோறும், இணர்ப்போது அலங்கல் அளகக்கொடி - கொத்தாக அமைந்த
மலர்களைக் கொண்டு கட்டப்பெற்ற மாலையினை யணிந்த கூந்தலாகிய கொடியின், அயல்
- பக்கத்தே, சுடர - ஒளிருமாறு, ஓடி - சென்று, விலங்கு - விலகாநின்ற, புருவக்கொடி -
புருவங்களாகிய கோடிகள், முரிந்து - நெரிவுற்று, வெருவெய்த - அச்சமெய்த, மதர்த்த -
மதர்ப்புடைய, அவர் - அம்மகளிரின், கண் - கண்கள், மலங்கின விலங்கின - சுழன்று
பிறழ்வனவாயின, (எ - று.)

அழகுடைய அம்மகளிர்கள் நடக்குந்தோறும் அவருடைய மதர்த்த வாள்போன்ற கண்கள்,
அவர் செவியோரத்தே கிடக்கும் அளகம்வரையோடிச் சுழன்று புருவக்கொடி அஞ்சி
நெரிந்து மேலேறுமாறு பிறழ்வன வாயின என்க. கண் வாள்போறலின் கொடிபோன்ற
புருவம் அஞ்சி முரிந்தன என்றபடி.

( 20 )