(இ - ள்.) அவர் - அம்மகளிருடைய, அடித்தலம் - அடிகள்; அலத்தகம் - செம்பஞ்சுக் குழம்பினை, மலைத்தன - தம்மியற்கை நிறத்தாலே வென்றன, கடி அல்குல் - அம்மகளிரின் காவலமைந்த அல்குற்றடம், அரற்றும் - ஆரவாரிக்கின்ற, கலைத்தலை மலைத்து - மேகலையிடத்தை வருத்தி, விரிகின்ற - விரியாநின்றன, முலைத்தலை - அம்மகளிரின் முலையிடத்தே, முகிழ்த்து - தோன்றிய, ஒளி - இயற்கையொளியாலே, முத்தம் - முத்து மாலைகள், துளும்பியுள - சுடர்மிக்குத் திகழ்ந்தன, சாயல் - அம் மகளிரின் சாயலோவெனில், மலைத்தலை - மலையிடத்தே வாழும், மயிற்கணம் - மயிலின் கூட்டத்தை, மருட்டும் - ஒக்கும், (எ - று.) முகிழ்த்த என்றது ஈறுகெட்டு முகிழ்த்தொளி எனப்புணர்ந்தது. மயிற்கணம் மருட்டும் - மயிற்கணமோ எனக் காண்போரை மருட்டும் என்க. |