(இ - ள்.) குழல்தொகை சுரும்பொடு சுழன்றுள - அந்த மங்கையர்களுடைய கூந்தல் தொகுதி வண்டுகளோடு சுழலுதலையுடைய, எழில்கை கரும்பொடு கலந்துள - மன்மதனுடைய அழகிய கையிடத்ததாகிய கரும்பின் சுவையோடே பொருந்துதல் உடையன; களித்த - காமக்களிப்புடைய, அவர் - அம்மகளிரின், தீம்பண் - இன்னிசைப்பாடல், விரல்தலை - அவர் விரல்களின் நுனி, நரம்பொடு நடந்துள - யாழினது நரம்போடே நடத்தலை உடையன, துவர் வாய் அமிர்தம் - அவருடைய செவ்விய பவளம்போன்ற வாயின் ஊறல், எயிற்று ஏர் அரும்பொடு - பற்களாகிய அழகிய முல்லையரும்போடே, பொலிந்த - பொலிவுற்று விளங்கின, (எ - று.) இது மகளிர்கள் யாழ்வருடிப் பாடுதல் கூறிற்று. கரும்பு - மதவேளின் வில்லாதலின், எழிற்கைக் கரும்பென்றார். தீம்பண் - கரும்பு போன்று சுவையுடையன என்க. |