457. கணங்குழை மடந்தையர் 3கவின்பிற ழிருங்கண்
அணங்குற விலங்குதொ றகம்புலர வாடி
மணங்கம ழலங்கலுடை மைந்தர்த மனந்தாழ்
வணங்கிடை வணங்குதொ றணங்கென வணங்கும்.
 

     (இ - ள்.) மைந்தர்தம் மனம் - இளங்காளையருடைய மனம், கணம்குழை -
கொத்தாகிய குழையினை அணிந்த, மடந்தையர் - இம்மடந்தையருடைய, கவின் - அழகிய,
பிறழ் - பிறழுகின்ற, இருங்கண் - கரிய விழிகள், அணங்குற - வருந்தும்படி, விலங்குதொறு
- பிறழுந்தோறும், அகம் புலர - உள்ளிடம் வற்ற, வாடி - வாட்டமுற்று, தாழ்வணங்கு
இடை - தாழ்ந்து ஓசியும் இடை, வணங்குதொறு - நுடங்கும்தோறும், அணங்கென - இவை
நம்மைத் தீண்டி வருத்தும் தெய்வம் என்றஞ்சி, வணங்கும் - வணங்கா நிற்கும், (எ - று.)

மைந்தர் மனம் அம்மகளிரின்கண் பிறழுந் தோறும் வாடி இடை வணங்குந்தோறும்
வணங்கும் என்க.

( 27 )