(இ - ள்.) நாம நூல் கலை - இன்ப நூல் என்னும் பெயரையுடைய நூலாகிய கலையிடத்தே கூறப்பட்ட, விச்சையின் நன்னெறி - வித்தைகளின் நல்லவழியாகிய, இவைதாம் - இவைகளே, தாமம்நீள்குழல் - மலர்மாலை யணிந்த நீண்ட கூந்தலோடே, தளர் நடையுருவு - தளர்ந்த நடையினை யுடைய மகளிர் வடிவத்தை, கொண்டனையார் - கொண்டாற்போன்றவராகிய, வாமமேகலை - அழகிய மேகலை அணிகலன் அணிந்த, மடவரலிவர்களை - இம்மகளிரை, வளர்த்தார் - ஈன்று வளர்த்தவர்கள், காமநூலினுக்கு - அவ்வின்ப நூலுக்கு, இலக்கியங்காட்டிய - எடுத்துக் காட்டாகக் காட்டும் பொருட்டு, வளர்த்தார் - இவர்களை வளர்த்தனர் போலும். (எ - று.) காம நூலிலே கூறப்பட்ட வித்தைகளின் நல்வழிகளே இம்மகளிராக உருக்கொண்டு வந்தன; இவரை வளர்ப்போரும், அக்காம நூலுக்கு உதாரணங் காட்டும் பொருட்டே வளர்த்தார் என்க. விச்சை - வித்தை. தாம்: அசை. |