அம்மாதர்களின் தன்மை

460. இனிய வீங்கிய விளமுலை யிவர்களை வளர்த்தார்
பனியின் 1மென்மல ரலர்ந்தன வுவகையிற் 2பயில்வார்
கனிப வேலிவர் கடல்விளை யமிர்3தெனக் கனிவார்
முனிப வேலிவ ரனங்கனைங் 4கணையென முனிவார்.
 

     (இ - ள்.) இனிய வீங்கிய இளமுலை இவர்களை - இனிமை மிக்கனவாகப் பருத்த
இளங் கொங்கைகளையுடைய இம்மங்கையர்களை, வளர்த்தார் - வளர்த்தவர்கள், பனியின்
மென்மலர் - குளிர்ச்சியையுடைய மெல்லிய மலர்கள், அலர்ந்தன உவகையில் பயில்வார் -
மலர்ந்தாற்போன்ற மகிழ்ச்சியிற் பொருந்துவார்கள், இவர் கனிபவேல் - இம்மங்கையர்கள்
அன்பினால் நெகிழ்வார்களாயின், கடல்விளை அமிர்து எனக்கனிவார் - கடலினிடத்திலே
யுண்டாகின்ற அமுதம் என்று கூறும் வண்ணம் இனிமை மிக்கவர்களாகத் திகழ்வார்கள்,
முனிபவேல் - அன்புகொண்டு கனியாது வம்புகொண்டு முனியத் தொடங்குவார்களாயின்,
இவர் - இந்த மங்கையர், காமன் ஐங்கணை என முனிவார் - காமவேளினுடைய ஐந்து
மலர்க்கணைகளின் கொடுந்தன்மையைப் போலச் சினப்பார்கள், (எ - று.)

இதனால் அம்மாதர்களின் தன்மை கூறப்பட்டது.

( 30 )