(இ - ள்.) புலவிதானும் - இவர் ஊடுதலும், ஓர் - ஒப்பற்ற, கலவியை - புணர்ச்சியை, விளைப்பதோர் - தோற்றுவித்தற்குரிய. புலவி - ஊடலேயாகும், அவ்வூடலகன்று, கலவிதானும் - இவர் கூடும் புணர்ச்சியும், ஓர் - பின்னரும், ஒரு புலவியை - ஊடலை, விளைப்பதோர் புலவி - தோற்றுவிப்பதாகிய புலவியேயாம், குலவுவார்சிலை - வளைகின்ற நெடிய வில்லையுடைய, மதனன் - காமவேளின், ஐங்கணையொடு குலவி - ஐந்து கணைகளோடும் பொருந்தி, இலவு வாயுடை இளையவர் - இலவ மலர்போன்ற சிவந்த வாயினையுடைய இளையராகிய இம் மகளிர், உடையன - உடையவாயிருக்கின்ற செயல்கள், இவையே - இப்புலவியும் கலவியுமேயாம், (எ - று.) புலவி கலவிக்கும் கலவி புலவிக்கும் காரணமாயின என்றவாறு, ஊடுதல் காமத்துக் கின்பம் புணர்தல் ஊடுற்கின்பமாகலின் இவ்வாறு கூறினார். இதனை, துனியும் புலவியும் இல்லாயிற் காமம் கனியும் கருக்காயுமற்று என்பதனானும் உணர்க. |