(இ - ள்.) சில சனங்கள் தாம் தவங்களைத் தாங்குதும் - மக்களிற் சிலபேர் தாங்கள் தவங்களைச் செய்கின்றோம், எனப் போய் - எனச் சென்று, வனங்கள் காப்பவர் உளர்என - காட்டைக் காவல் புரிபவர்களாக இருக்கிறார்கள் என்று, தனங்கள்தாம் - இந்த மங்கையரின் கொங்கைகள், முனிவ - சினக்கின்றன, அன்றேல் - அல்லாவிட்டால், தவழ் சந்தனக் குழம்பிடை வளர்ந்த - பூசப்பெறுகிற சந்தனக் குழம்பினூடே வளர்ந்த, கனம்கொள் வெம்முகம் - கனத்தைக் கொண்டு விருப்பத்தைச் செய்கிற காம்பிடம், கறுப்பது என் காரணம் - கறுத்திருப்பதற்குக் காரணம் யாது?, உரையீர் - கூறுவீர்களாக, (எ - று.) மற்று பிரிநிலைக்கண் வந்தது. முலைக்கண்கள் இயற்கையில் கருநிறமுடையனவாகவும் தவம்புரிவோர் செயலைநோக்கி அவைகள் சினங்கொண்டமையின் கருநிறத்தை அடைந்தனவென ஒரு காரணத்தைக் கற்பித்துக் கூறினார். |