(இ - ள்.) வண்ணம் சந்தங்கள் நிறைந்தன மணிச்செப்பு - நல்ல நிறம்பொருந்திய சந்தனங்கள் நிறைந்தனவாகிய அழகிய சிமிழ்களும், வளர்பூங்கண்ணி - மிகுதியான பூமாலைகளினாலாகிய, சந்தங்கள் நிறைந்தன கரண்டகம் - அழகுப்பொருள்கள் நிறைந்தனவாகிய பூங்குடலைகளும், கமழ் - நறுமணம் வீசுகின்ற, பூ சுண்ணச்சந்தங்கள் - அழகிய நறுமணப் பொடி வகைகள், நிறைந்தன - நிறைந்தனவாகிய, சுடர்மணிப்பிரப்போடு - விளங்குகின்ற மணிகள் இழைத்துச் செய்யப்பெற்ற குறுணியளவுள்ள ஏனமும் ஆகியவற்றை, எண்ண - யாவரும் மதிக்கவும், சந்தங்கள்பட - அழகுகள் பொருந்தவும், சுமந்து - ஏந்திக்கொண்டு, இளையவர் இசைந்தார் - வேறுபல பெண்களும் அங்குவந்து சேர்ந்தார்கள், (எ - று.) முன்னர்வந்த நான்கு மகளிர்கட்குமேல், மற்றும்பல மங்கையர் பல வரவேற்புப் பொருள்களுடன் ஆங்குப் போந்தமை இச்செய்யுளிற் கூறப்பெறுகிறது. பிரப்பு என்பது குறுணியளவான பொருளைக் கொள்ளும் ஏனம் என்பர். பெருங்கதை சிந்தாமணி முதலிய நூல்களிலும் இவ்வாறே வழங்கப்பெறும். |