(இ - ள்.) மகளிர் - பணிப்பெண்கள். தகளிவெஞ்சுடர் எனத்திகழ் - தகளியிலேற்றப்பெற்ற விளக்கின் வெவ்விய சுடரைப்போல விளங்குகின்ற, மணிக்குழை தயங்க - அழகிய குண்டலமென்னும் காதணியானது விளங்க. மங்கல உழைக்கலம் சுமந்தவர் - மங்கலம் பொருந்திய உழைக்கலப் பொருளைத் தாங்கி வந்தவராகிய, பிறரோடு - பிறமகளிரோடுங்கூடி, உகளும் மான்பிணை அனையவர் - தாவுந் தன்மையுள்ள பெண்மானையொத்தவராய், உழைச்செல - மரீசியின் பக்கத்திலே செல்ல, ஒளிர்தார் - விளங்குகின்ற மாலையை அணிந்த, துகள் இல் விஞ்சையன் - குற்றமற்ற விஞ்சையர் தூதுவனாகிய மரீசியானவன், துறக்கம் ஈது எனவே துணிந்தனன் - விண்ணுலகம் இஃது என்றே முடிவு செய்தான். (எ - று.) பல அழகிய மகளிர்களையும் அவர்களிடத்தில் இருந்த வழிபாட்டுப் பொருள்களையும் கண்டமருசி, இது மண்ணுலகன்று விண்ணுலகே என்று பெருங்களிப்படைந்தான் என்க. உழைக்கலம் - வீட்டில் வைத்துக்கொண்டு பழகுதற்குரிய பொன் வெள்ளி இவற்றால் ஆன ஏனங்கள். |