மங்கையர் வழிபாட்டைப்பெறும் மரீசி
தேவனைப்போலத் திகழ்தல்

471. ஆட்டி னார்வெறி கமழ்வன வணிகிளர் நறுநீர்
தீட்டி னார்நறுஞ் சாந்தமுஞ் 3சிறிதுமெய் கமழச்
சூட்டி னார்சிலர் நறுமல ரறுசுவை யடிசில்
ஊட்டி னாரவ னமரரு ளொருவனொத் தொளிர்ந்தான்.
 

      (இ - ள்.) வெறிகமழ்வன அணிகிளர் நறுநீர் - பலவகை மணங்கள் பொருந்திய
மேன்மையமைந்த நல்ல நீரில், ஆட்டினார் - மரீசி குளிக்கும்படியாகச் செய்தார்கள்,
நறுஞ்சாந்தமும் சிறிது தீட்டினார் - நல்ல சந்தனத்தையுஞ் சிறிது பூசினார்கள், சிலர் - சில
மாதர்கள், நறுமலர் மெய்கமழச் சூட்டினார் - நல்ல மணம்மிக்க மலர்களை உடலிலே
மணங்கமழும்படியாக அணிந்தார்கள். அறுசுவை அடிசில் ஊட்டினார் - ஆறுவகை
இனிமைகளும் அமைந்த உணவை உண்பித்தார்கள். அவன் அமரருள் ஒருவன் ஒத்து
ஒளிர்ந்தான் - வழிபாடுகளையெல்லாம் பெற்ற அம் மரீசியானவன் தேவர்களுள்
ஒருவனைப் போன்று திகழ்ந்தான். (எ - று.)

பணிப்பெண்கள் மருசிக்குச் செய்யவேண்டியவைகளை யெல்லாஞ் செய்தனர். அதனால்
மருசி விண்ணகத்துத் தேவர்களில் ஒருவனைப் போன்று சிறந்து விளங்கினான்.

( 41 )