(இ - ள்.) வயங்குதொல் புகழ் அம்பரசரன் - விளங்குகின்ற பழைமையான சீர்த்தியையுடையவனும் விசும்பாறாகப் போக்கு வரவு செய்பவனுமாகிய மரீசியானவன், வயந்தமுன்னிய திலகை - வயந்தம் என்னும் பெயருக்கு முன்னாலே திலகை என்பது சேரப்பெற்ற வயந்த திலகை, கல்லியாணிகை - கல்லியாணிகை, வடிவார் வியந்தசேனை - அழகு பொருந்திய வியந்த சேனை, மென் கமலமாலதை - மென்மைத்தன்மை பொருந்திய கமலமாலதை, எனவிளம்பும் - என்று சொல்லப்பெறும், இயங்கு பூங்கொடி அனையவர் - அசைகின்ற பூங்கொடியைப் போன்றவர்களது, இயல்புகள் நினையா - அழகியதன்மைகளையெல்லாம் எண்ணிப்பார்த்து, மகிழ்ந்து இருந்தான்-களிப்புடன் அமர்ந்திருந்தான். (எ - று.) மருசிக்குச் சிறப்புச் செய்தற்குவந்த மங்கையர்கட்குத் தலைவராயினார் பெயர் வயந்ததிலகை, கல்லியாணிகை, வியந்தசேனை, கமலமாலதை என இப்பாட்டால் குறிப்பிடுகிறார். இவர்கள் செய்யும் உபசாரத்தினை மருசி பார்த்து வியந்துமகிழ்ந்திருகின்றான் என்க. |