யானைமீது விசயதிவிட்டர்கள் ஏறிய சிறப்பு

474. தம்பியோடு சங்கவண்ண னம்பொன்மாலை 1தாழ்முகப்
பைம்பொனோடை வீழ்மணிப் பகட்டெருத்த மேறினான்
செம்பொன்மா மலைச்சிகைக் கருங்2கொண்மூவி னோடெழூஉம்
வம்பவெண்ணி லாவிலங்கு திங்கள்போல 3மன்னினான்.
 

     (இ - ள்.) தம்பியோடு சங்க வண்ணன் - தம்பியாகிய திவிட்டனுடனே
விசயனானவன், அம்பொன்மாலை தாழ்முகம் - அழகிய பொன்னரிமாலையானது
தொங்குகின்ற முகத்தையும், பைம்பொன்ஓடை - பசிய பொன்னாலாகிய முகபடாத்தையும்,
வீழ்மணி - இரண்டு புறத்துந் தாழ்ந்து தொங்குகின்ற மணிகளையும் உடைய, பகடு எருத்தம்
ஏறினான் - ஆண் யானையினுடைய பிடரியின்மீது ஏறினான்; செம்பொன் மாமலைச் சிகை
- செம்பொன்னைக்கொண்ட பெரிய மலையுச்சியிலே, கருங்கொண் மூவினோடு எழூஉம் -
கருநிறமுடைய முகிலினோடு எழுந்து தோன்றுகின்ற, வம்பவெள் நிலா இலங்கு -
புதுமையையுடைய வெள்ளிய நிலவினால் மிளிருகின்ற, திங்கள்போல் மன்னினான் -
திங்களைப்போலப் பொருந்தியிருந்தான். (எ - று.)

யானை மலைக்கும், முகில் திவிட்டனுக்கும், திங்கள்விசயனுக்கும் உவமை.

( 44 )