விசய திவிட்டர்களுடன் பலவகைப் படைகள் புறப்படுதல்

475. ஆர்த்தபல்லி யக்குழா மதிர்த்தகுஞ்ச ரக்குழாம்
தேர்த்தவீரர் தேர்க்குழாந் நிசைத்தபல்ச னக்குழாம்
போர்த்த4சா மரக்குழாம் 5புதைத்தவெண் கொடிக்குழாம்
வேர்த்தவேந்தர் பல்குழாம் விரைந்தகூந்தல் மாக்குழாம்.
 

     (இ - ள்.) பல்லியக்குழாம் ஆர்த்த - பலவகை ஒலிக்கருவிகளின் கூட்டங்கள்
முழங்கின, குஞ்சரக்குழாம் அதிர்த்த - யானைக் கூட்டங்கள் அதிர்ந்தன, வீரர் தேர்குழாம்
தேர்த்த - மள்ளர்களுடைய தேர்க்கூட்டங்கள் வந்து கலந்தன, பல்சனக் குழாம் திசைத்த -
பல மக்களின் கூட்டம் உடன் செல்ல இடங்கிடைக்காமல் திகைத்து நின்றன, சாமரக்குழாம்
போர்த்த - சாமரக் கூட்டங்கள் எல்லாவிடங்களினும் மூடின, வெண்கொடிக் குழாம்
புதைத்த - வெண்கொற்றக் கொடிகளின் கூட்டம் எல்லாவிடங்களையும் மறைத்தன, வேந்தர் பல்குழாம் வேர்த்த - அரசர்களுடைய பல கூட்டங்கள் நெருக்கமுண்மையால்
களைப்படைந்தன, கூந்தல்மாக்குழாம் விரைந்த - பிடரி மயிரையுடைய குதிரைக்
கூட்டங்கள் விரைவாகச் சென்றன. (எ - று.)

தேர்த்த - கலந்தன. திசைத்த - திகைத்தன. சனம் - மாந்தர்.

விசய திவிட்டர்களோடு பலவகைப் படைகளும் புறப்பட்டுச் செல்லுதல் இதில்
குறிக்கப்பட்டது.

( 45 )