(இ - ள்.) மாடவாயில் மேல்எலாம் மடந்தைமார் - விசயதிவிட்டர்களைக் கண்ட அளவில் மாளிகைகளின் மேலிடங்களிலெல்லாம் மங்கையர்கள் கூடி, பாடுவார் - சிலர் மகிழ்ச்சி மிகுந்து பாடலானார்கள், வணங்குவார் - சிலர் விசய திவிட்டர்களை வணங்கலானார்கள், பலாண்டுகூறி வாழ்த்துவார் - சிலர் பல்லாண்டு கூறி வாழ்த்தலானார்கள், ஆடுவாரோடு ஆர்வ மாந்தர் அன்னர் - ஆடுகின்றவர்களோடு ஆர்வமிக்க சில மாந்தர் தாமும் அவர்களைப் போல மகிழ்ச்சி மிகுந்து ஆடலானார்கள். இன்னர் ஆயபின் - அவர் இத்தன்மையை யுடையவர் ஆன பிறகு, மடந்தைமார் - மகளிர்கள், சூடுமாலை சோரவும் - அணிந்துள்ள பூமாலை வாடவும், தொடு ஆரமாலை வீழவும் - அணிந்துள்ள முத்துமாலை கீழே விழவும், மயங்கினார் - அறிவு கலங்கினார்கள். (எ - று.) விசயதிவிட்டர்களைக் கண்ட நகரநங்கையரின் நிலை இதில் கூறப் படுகிறது. அழகின் மிக்காராய அக்காளையர் மங்கையர்களின் உள்ளத்தைக் கொள்ளை கொள்ளுதலால் பாடல் ஆடல் மயல் முதலியன உண்டாயினவென்க. |