(இ - ள்.) மாலை தாழும் மாடவாய் - மாலைகள் தொங்கவிடப்பெற்ற உப்பரிகையமைந்த வீட்டிலே, நிலத்தகத்து - மேனிலத்திலே, சாலவாயில் எலாம் - சாரளங்களின் வாயில்கள் எல்லாம், மங்கைமார் - மாதர்களின், வேல் அவாய நெடிய கண் - வேற்படையை யொத்த நீண்ட கண்கள், விலங்கி நின்று இலங்கலால் - விட்டு விட்டு ஒளி செய்து விளங்குதலால், ஓர் தாமரைத்தடத்திடை - ஒரு தாமரைத் தடாகத்தினிடத்திலே, நீலமா மலர்க்குழாம் - கருங்குவளை என்னுஞ் சிறந்த மலர்க் கூட்டங்கள், நிரந்து அலர்ந்த நீர - வரிசையாக மலர்ந்து விளங்குந் தன்மையைப் போலக் காணப்பட்டன. (எ - று.) தாம் : அசை. விசயதிவிட்டர்கள் பொழிலையடைதற்குத் தெருவழியாகச் செல்லுகின்றனர். அந்நகரத்து மாதர்கள் மேனிலத்திலேயுள்ள பல கணி வழியாக அவர்களைப் பார்க்கின்றனர். அப்பலகணிகள் தாமரைத் தடாகத்தினிடையே கருங்குவளை மலர்க்கூட்டங்கள் அடுக்கடுக்காக மலர்ந்திருக்கின்றாற் போலக் காணப்பெறுகின்றன. |