(இ - ள்.) சுண்ணமாரி தூவுவார் - நறுமணப் பொடிகளை மழைபோல இறைப்பார்கள், தொடர்ந்து சேர்ந்து - பின்பற்றிச் சென்று, தோழிமார் - தோழிப் பெண்களுடைய, வண்ண ஆரவளை தயங்கு - அழகிய முத்துக்கள் பதித்துச் செய்யப்பெற்ற வளையல்கள் விளங்குகின்ற, முன்கைமேல் வணங்குவார் - முன்கையினிடத்திலே பணிவார்கள், நாண் ஒழிந்துசென்று நண்ணி - நாணமானது நீங்குமாறு போய், நம்பிமார்கள் முன்னரே - விசய திவிட்டர்களுக்கு முன்பு, கண்ணி தம்மின் - நீங்கள் அணிந்துள்ள மாலையைத் தாருங்கள், என்று இரந்துகொண்டு நின்று கண்ணுவார் - என்று கூறிக் கேட்டுக்கொண்டு நின்று பலவாறு எண்ணுவார்கள். (எ - று.) விசயதிவிட்டராம் இளங்காளையரைக் கண்ட நங்கையரின் செயல் இச்செய்யுளாலும் கூறப்பெறுகிறது. மங்கைமார் மாலையை இரத்தல் இதனில் கூறப்பட்டது. |