(இ - ள்.) பாடுவார் - பண்பாடுகின்ற மகளிர்கள், முரன்ற பண் மறந்து - தாம் பாடிய பண்ணமைதியை மறந்தனராய், ஓர்வாறு - ஏதோ ஒருவகையானே, பாடியும் - பாடுவாரும், ஆடுவார் - கூத்தாடு மகளிர்கள், மறந்து - தாம் ஆடும் கூத்தியலினை மறந்தனராய், மயங்கியர் - மயங்கியவராய், மையாடியும் - குற்றமுற ஆடுவாரும், சூடுவான் தொடுத்த கோதை - சூடிக்கோடற் பொருட்டுத் தொடுத்த மாலைகளை, சூழ்குழல் மறந்து - சூடவேண்டிய குழலிலே சூடுதலை மறந்தனராய், கண் நாடு வாய் - தம் கண்கள் நாடிய விடத்தே தோன்றிய, நிழற்கு அணிந்து - நிழலிலே சூட்டத்தொடங்கி, அஃதமையாமையாலே, நாணுவாரும் ஆயினார் - நாணமடைகின்றவர்களும் ஆயினர். மாதர்கள் விசய திவிட்டர்களின் அழகால் மயங்கியமையின் இந் நிலையை அடைந்தனர் என்க. |