483. இட்டவில்லி ரட்டையுமி ரண்டுகெண்டை 1போல்பவும்
விட்டிலங்கு தொண்டையங் கனிப்பிழம்பொ டுள்விராய்ச்
சுட்டிசூட்ட ணிந்துசூளி மைமணிசு டர்ந்துநீள்
பட்டம்வேய்ந்த வட்டமல்ல தில்லைநல்ல பாங்கெலாம்.
 

     (இ - ள்.) நல்ல பாங்கெலாம் - அழகிய பக்கங்கள் எங்கும், இட்டவில் இரட்டையும்
- வைக்கப்பட்ட இரட்டை விற்களும், இரண்டு கெண்டை போல்பவும் - இணைக்கயல்களை
ஒப்பனவும், விட்டிலங்கு - ஒளிவிட்டுத் திகழாநின்ற, தொண்டை யங்கனிப் பிழம்பொடு -
கொவ்வைக் கனியின் உருவத்தோடே, உள்விராய் - உள்ளகத்தே பரவி, சுட்டி -
நுதற்சுட்டியாகிய, சூட்டு - அணியினை, அணிந்து - சூடி, சூளிமை மணி சுடர்ந்து - சிகையின் கண் நீலமணி ஒளிவீசி, நீள் பட்டம் - நீண்ட பொற்பட்டத்தைக்கட்டிய, வட்டம் அல்லது - வட்ட வடிவமான மகளிர் முகங்களை யல்லாது, இல்லை - வேறு பொருள்கள் காணப்படவில்லை. யாண்டும் மாதர் முகங்களே காணப்பட்டன என்க.

வில்லிரட்டை - புருவங்கள். இரண்டுகெண்டை - கண்கள். வட்டம் - முகமண்டிலம்.

( 53 )