(இ - ள்.) நீலவாள் நெடுங்கணார் - கருமை தங்கிய வாளைப் போன்ற நீண்ட கண்களையுடையவர்களாகிய மங்கையர், நிரந்து - எங்குங் கலந்து, மாலையால் விளங்கியும் - மாலையுடன் சிறப்பாகக் காணப்பெற்றும், வாசம் பொன் சுண்ணம் வீசியும் - மணந்தங்கிய பொன் பொடிகளை இறைத்தும், சாலவாயில் ஆறு - சாளர வாயில்களின் வழியாக, சந்தனக்குழம்பு சிந்தியும் - சந்தனக் குழம்பைத் தெளித்தும், நெஞ்சு தாழ் ஒரீஇ - நெஞ்சத்தின் தாழ்ப்பாளாகிய நிறையையுங்கடந்து, ஞாலமாளும் நம்பிமாரின் - உலகத்தையாளும் விசய திவிட்டரின் பால், மாலும் ஆகி - காமமயக்கமும் உண்டாகப்பெற்று, நண்ணினார் - விசயதிவிட்டரின் படைகளோடு வந்து சேர்ந்தார்கள். (எ - று.) நம்பிமாரின் மாலுமாகி என்றது சிலேடை. மால் - திருமால், மயக்கம். நம்பிமாரைக் கண்ட நங்கைமார் மயல்கொண்டு தளர்தல் இதனிற் கூறப்பட்டது. சிலபிரதிகளில், முதலடி 'மாலையால் விளங்கியும் வாசச்சுண்ணம் வீசியும்' என்று காணப்பெறுகிறது. |