விசய திவிட்டர்கள் பொழிலையடைதல்

489. மானளாய நோக்கினார்ம னங்கலந்து பின்செல
வானளாய சோலைவாயின் மன்னவீரர் துன்னலும்
கானளாய போதணிந்து காவிவிம்மு 1கள்ளளைஇத்
2தேனளாவு வண்டுகொண்டு தென்றல்சென் றெழுந்ததே.
 

     (இ - ள்.) மான் அளாய நோக்கினார் - மானின் பார்வை பொருந்திய
கண்களையுடையவரான மகளிரின், மனம் கலந்து பின்செல - மனமானது விசய
திவிட்டர்களோடு சேர்ந்து அவர்களுக்குப் பின்னே செல்லவும், வான் அளாய
சோலைவாயில் - வானத்தையளாவுமாறு மிக வோங்கியுள்ள பூங்காவினது வாசலை,
மன்னவீரர் துன்னலும் - அரச வீரர்களாகிய விசய திவிட்டர்கள் அடைதலும், தென்றல் -
தென்றற் காற்றானது, கான் அளாயபோது அணிந்து - நறுமணம் பொருந்திய மலரை
அணிந்துகொண்டு, காவி விம்மு கள் அளைஇ - கருங்குவளை மலரில் மிகுந்துள்ள
தேனைத்துழாவி, தேன் அளாவு வண்டு கொண்டு - தேனில் அலைகின்ற வண்டையும்
உடன்கொண்டு, சென்று எழுந்தது - விசய திவிட்டர்களை எதிர்கொள்ளுமாறு எழுந்து
சென்றது. (எ - று.)

பெரியோர்வரின் அவர்களை எதிர்கொண்டு போற்றுதல் உலக வழக்கு. இங்கு
எதிர்கொண்டு விசய திவிட்டர்களைப் போற்றுந் தொழில் தென்றல்மீது ஏற்றப்பட்டது.
வண்டை இசைப்பாடகராகக் கொள்க.

( 59 )