(இ - ள்.) மாதுநின்ற மாதவிக்கொடிகள் - அழகு பொருந்திய குருக்கத்திக் கொடிகள், தாதுநின்ற தேறல்நீர் - மகரந்தத் தாதுபடிந்த தேனாகிய நீரை, தளித்து - துளித்து, இவற்றின் மேல் - அவ்வாறு தெளித்த நீர்களின்மேல், அளிகோதுகின்ற போதுகொண்டு சிந்தி - வண்டுகள் குடைகின்ற மலர்களைக் கொண்டு தூவி, நம்பிமார்களை - விசய திவிட்டர்களை, போதுக என்று - இங்கு வருக என்று கூறி, தம் தளிர்க்கையால் - தம்முடைய தளிர்களாகிய கைகளினால், இடங்கள் காட்டுகின்ற போல் - அவர்கள் தங்குதற்குரிய இடங்களைக் காட்டுவனபோல் பொலிந்த - விளங்கின. (எ - று.) மாதவிக்கொடிகள் தேறலைத் துளித்தலும் போதுகளைச் சிந்துதலும் தளிரையசைத்தலும் இயற்கை. விசய திவிட்டர்கள் பொழிலுக்கு வந்தபோது மாதவிக் கொடிகளினிடத் துண்டாகிய இயற்கைத் தன்மை விசய திவிட்டர்களுக்கு வரவேற்பாக உரைக்கப்பட்டது. |