(இ - ள்.) வண்டு - வண்டுகள், புல்லி - தழுவிக்கொண்டு, அமர்ந்து - பொருந்தி, தங்குபூந்தழைப் பொதும்பு இடை - தங்கப்பெற்ற பூவோடு கூடிய இலைகளைக்கொண்ட அச்சோலையினிடத்தில், மல்லிகைக் கொடிக்கலந்து - மல்லிகைக் கொடிகள் சேரப்பெற்று, மௌவல்சூட - முல்லைக் கொடியையும் அணிய, வௌவுநீர் - கண்டவருள்ளத்தைக் கவருந்தன்மை வாய்ந்த, வல்லி மண்டபங்கள் சென்று - கொடிகளாலாகிய மண்டபங்களிற்போய், மாதவிக்கொழுந்து அணி - குருக்கத்திக் கொழுந்துகளினால் அழகுபடுத்தப்பெற்ற அல்லி மண்டபத்து அயல - பூக்கள் செறிந்த மண்டபத்திற்கு அண்மையிலுள்ள, அசோகம் ஆங்கண் எய்தினார் - அசோக மரமுள்ள அந்த இடத்தை அடைந்தார்கள் (எ - று.) மருசி தங்கியிருந்த அசோகமரத்தின் இடத்தை விசயதிவிட்டர்கள் அடைந்தனர் என்க. அந்த அசோகமரம் கொடி மண்டபங்களைக் கடந்து, மாதவிக் கொழுந்து கொண்டு அணியப்பெற்ற மலர் மண்டபத்தின் பக்கத்தில் இருந்தது என்று அசோகமரம் இருந்த இடத்தைக் குறிப்பிட்டார். |