விசயதிவிட்டர்களை மரீசி வியந்து நோக்குதல்

497. பானிறக்க திர்நகைப ரந்தசோதி யானையும்
நீனிறக்க ருங்கட னிகர்க்குமேனி யானையும்
வானெறிக்கண் வந்தவன்ம கிழ்ந்துகண்ம லர்ந்துதன்
நூனெறிக்கண் மிக்கநீர்மை யொக்கநின்று நோக்கினான்.
 

     (இ - ள்.) வான்நெறிக்கண் வந்தவன் - விண்வழியாக வந்த மரீசியானவன்,
பால்நிறக் கதிர்நகை - பாலின் நிறத்தைப் போன்று ஒளிவீசும் வெள்ளொளியானது, பரந்த
சோதியானையும் - பரவப்பெற்ற ஒளிபொருந்தியவனாகிய விசயனையும் - நீல்நிறக்
கருங்கடல் நிகர்க்கும் மேனியானையும் - நீலநிறத்தைக் கொண்ட பெரிய கடலை
யொத்திருக்கும் நிறமமைந்த உடலையுடையவனாகிய திவிட்டனையும், கண்மலர்ந்து -
கண்களை நன்கு திறந்து, தன் நூல்நெறிக்கண் மிக்க  நீர்மைஒக்க - தான்கற்ற
உடலிலக்கண நூலிலே சொல்லப்பெற்ற சிறந்த தன்மைகளானவை பொருத்தமாக
அமைந்திருக்கக் கண்டு, மகிழ்ந்து நின்று நோக்கினான் - மகிழ்ச்சியை அடைந்து நன்றாகப் பார்த்தான். (எ - று.)

விசய திவிட்டர்களிடம் நல்லாடவர்க்குரிய குணங்குறிகள் யாவும் அமைந்திருத்தலை
மருசிகண்டு வியப்புடன் நோக்குகின்றனன் என்க. விசயன் வெண்ணிறத்தா னாகையால்
'பானிறக் கதிர்நகை பரந்தசோதி யான்' எனப்பட்டான். திவிட்டன் கருநிறத்தானாதலால்
'நீனிறக் கருங்கடல் நிகர்க்கு மேனியான்' எனப்பட்டான். கருமை பெருமை மேற்று.

( 67 )